விபத்தில் கை, கால் செயலிழந்ததால் விரக்தி: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை

விபத்தில் கை, கால் செயலிழந்த விரக்தியில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-01-19 22:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரத்தில் நடந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

விழுப்புரம் சாலாமேடு முல்லை தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் தினகரன் (வயது 20). இவர் கடந்த 2017–ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது நடந்த ஒரு சாலை விபத்தில் தினகரனின் ஒரு கையும், ஒரு காலும் செயலிழந்து விட்டது. அதன் பிறகு அவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதோடு, மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார்.

இதனால் சிவக்குமார் தனது மகன் தினகரனை நன்னாடு கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர் பல மாதங்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தினகரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியை எடுத்து தன்னுடைய இன்னொரு கை மற்றும் கழுத்து பகுதியில் அறுத்துக்கொண்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை தினகரன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்