நங்கவள்ளி அருகே, கோவில் விழா நடத்துவதில் பிரச்சினை: கிராம மக்கள் திடீர் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

நங்கவள்ளி அருகே கோவில் தைப்பூச கிரிவல விழா நடத்துவது தொடர்பாக பிரச்சினை எழுந்த நிலையில், கிராம மக்கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

Update: 2019-01-19 22:30 GMT
மேச்சேரி,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே சோரகை மலை மீது வேட்ராயபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச கிரிவல விழா 2 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

முதல் நாள் வேட்ராயபெருமாள் உற்சவர் சிலை மலை மீது கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். 2-வது நாள் சோரகைமலையை சுற்றி உள்ள சின்ன சோரகை, பெரிய சோரகை, குட்டப்பட்டி, மானத்தாள் ஆகிய 4 ஊராட்களில் 25-க்கும் மேற்பட்ட ஊர்கள் வழியாக வேட்ராயபெருமாள் சாமி, சின்னசோரகையில் உள்ள சக்தி மாரியம்மன் சாமி உற்சவர் சிலைகள் கிரிவலம் எடுத்து வரப்படுவது வழக்கம்.

இரு பிரிவை சேர்ந்தவர்கள் சேர்ந்து இந்த தைப்பூச கிரிவல விழாவை நடத்துவார்கள். கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பை சேர்ந்தவர்களிடையே கருத்து மோதல் இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா தொடங்குவதற்கு முன்பாக இருபிரிவினரை அழைத்து அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவர்.

அதேபோல கடந்த வாரம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் ஒரு பிரிவினருக்கு சாதகமாக குழு அமைக்கப்பட்டு விழா நடத்த அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த மற்றொரு பிரிவினர் விழா நடத்துவதற்கான உரிமை எங்களிடம் உள்ளது, எனவே வழக்கம் போல இரு பிரிவினரும் இணைந்து விழா நடத்த அனுமதிக்க வேண்டும் எனக்கூறி நங்கவள்ளி-தாரமங்கலம் சாலையில் பெரியசோரகை குள்ளானூர் பகுதிக்கு நேற்று கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் காலை 9.30 மணி முதல் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இரு பிரிவினரையும் அழைத்து பேசி இரு தரப்பும் இணைந்து அமைதியான முறையில் கிரிவல விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

இதைதொடர்ந்து நேற்று மதியம் மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருபிரிவினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இருபிரிவினரும் இணைந்து இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தைப்பூச கிரிவல விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டதை அடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்