இஸ்ரோவின் புதிய திட்டத்தில் புதுவை மாணவர்களுக்கு வாய்ப்பு அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

இஸ்ரோவின் புதிய திட்டத்துக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-19 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை உப்பளம் பெத்திசெமினார் பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு கண்காட்சியை திறந்துவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–

இஸ்ரோ நிறுவனம் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களை அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட செய்ய ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து ஒன்று அல்லது 2 மாதம் இஸ்ரோவில் பயிற்சி அளிக்க உள்ளது.

இதில் புதுச்சேரியில் இருந்தும் 3 மாணவர்கள் அனுப்பப்பட உள்ளனர். அதற்கான தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.

இஸ்ரோவின் முன்னாள் இணை இயக்குனர் ரகுநாத் ராதாகிருஷ்ணன், மாணவர்கள் புத்தகத்தை பார்த்து படிப்பதுடன் இருக்கக்கூடாது. அறிவியல் கண்டுபிடிப்புகளை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு புத்தகத்தில் வரும் கண்டு பிடிப்புகளைப்போல் மாணவர்களும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அறிவியல் சாதனங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் புதுவை – கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம், ஜான்பால் கல்வியியல் கல்லூரியின் செயலர் சாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியில் பிரமாண்ட ஏவுகணை, பறவை இன டைனோசர், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை தாவரங்கள், மீன் வகைகள், செவ்வாய் கிரகத்தை படமெடுக்கும் ரோபோ, நோய்களை கண்டறியும் ரோபோ, பிளாஸ்டிக் ஒழிப்பு, டி.என்.ஏ. செயல்பாடு ஆகியவை உள்பட பல்வேறு அம்சங்களை விளக்கும் 340 படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. மாலை 7 மணிக்கு நடக்கும் பரிசளிப்பு விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

மேலும் செய்திகள்