கடனாக கொடுத்த ரூ.5 லட்சத்தை திரும்ப கேட்டதால் பைனான்சியரை அடித்துக் கொலை செய்தோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

கடனாக கொடுத்த பணம் ரூ.5 லட்சத்தை வட்டியுடன் திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பைனான்சியரை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Update: 2019-01-19 23:45 GMT
வில்லியனூர்,

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் வில்லியனூரை அடுத்த கோட்டைமேடு சுடுகாட்டில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராமலிங்கத்தின் உடலை பார்வையிட்டனர். அப்போது தலையில் இரும்புக் குழாயால் அடித்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ராமலிங்கத்தை அவரது நண்பர்களான வில்லியனூர் கணுவாப்பேட்டையைச் சேர்ந்த ராஜா என்ற பச்சையப்பன் (31), சக்திவேல் (28), சபரி (22), நடராஜன் என்ற ராஜா (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதகடிப்பட்டு நல்லூர் ஏரிக்கரையில் பதுங்கி இருந்த அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் முன்னிலையில் வில்லியனூர் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த ராமலிங்கத்துக்கு ராஜா உதவியாக இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ராஜா தன்னுடைய உறவினருக்கு என்று கூறி 5 லட்சம் ரூபாயை ராமலிங்கத்திடம் கடனாக வாங்கினார். ஆனால் அவர் அந்த பணத்தை மற்றவர்களுக்கு அதிக வட்டிக்கு கொடுத்து வசூலித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ராஜாவிடம் தனது பணம் ரூ.5 லட்சத்தை ராமலிங்கம் வட்டியுடன் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ராஜா, தனது மைத்துனர் சக்திவேல், நண்பர்கள் சபரி மற்றும் நடராஜன் ஆகியோருடன் சேர்ந்து ராமலிங்கத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி வீட்டில் இருந்த ராமலிங்கத்தை அழைத்துச் சென்று மது வாங்கிக் கொடுத்துள்ளனர். பின்னர் அவரை கோட்டைமேடு சுடுகாடு அருகே அழைத்துச் சென்று இரும்புக்குழாயால் அடித்து கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கைதான 4 பேரும் புதுச்சேரி 3-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்