குப்பைகளை சேகரிக்க 450 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் மாநகராட்சி நடவடிக்கை

குப்பைகளை சேகரிக்க 450 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் பயன்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2019-01-20 22:45 GMT

மதுரை,

மதுரை மாநகரில் தினமும் 600 டன் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகள் வீடு, வீடாக சென்றும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் மூலம் சேகரிக்கப்படுகிறது. வீடு, வீடாக சென்று சேகரிப்பதற்கு மாநகராட்சி சார்பில் ஊழியர்களுக்கு டிரை சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டிரை சைக்கிள் மூலம் குப்பைகள் பெறுவதில் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.

இவர்களின் சிரமத்தை போக்கி, வீடு வீடாக சென்று எளிதாக குப்பைகளை சேகரிக்க பேட்டரி வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்தது. மொத்தம் 500 பேட்டரி வாகனங்கள் வாங்க தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதில் 250 வாகனங்களுக்கு அரசு அனுமதி தந்தது. அதில் முதல்கட்டமாக 25 வாகனங்கள் மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் சேவையை மதுரையில் நேற்று முன்தினம் நடந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழாவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் வீடு வீடாக மூன்று சக்கர டிரைசைக்கிள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. டிரை சைக்கிள்களுக்கு மாற்றாகவும், குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்கு வசதியாகவும், திடக்கழிவுகளை எளிதில் கையாளும் வகையிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் 50 வாகனங்கள் வாங்குவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதில் முதற்கட்டமாக 25 வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரை மாநகராட்சியில் தான் அனைத்து வார்டு பகுதிகளிலும் இந்த பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 450 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் என பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்