செங்குன்றம் போலீஸ் நிலையம் எதிரே கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு கணவரை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக புகார்

தனது கணவரை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கூறி செங்குன்றம் போலீஸ் நிலையம் எதிரே கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-01-20 23:30 GMT
செங்குன்றம்,

சென்னை எண்ணூர் ராமமூர்த்தி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் பரமசிவம் என்ற பர்மா பரமசிவம் (வயது 20). இவர் மீது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளன.

செங்குன்றம் போலீசார் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக பரமசிவம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ்(20) இருவரையும் நேற்று முன்தினம் செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

இதையறிந்த அவர்களது உறவினர்கள் நேற்று காலை செங்குன்றம் போலீஸ் நிலையம் முன்பு கூடினர். எதற்காக இருவரையும் அழைத்து வந்து உள்ளர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீசார், செங்குன்றத்தில் நடந்த திருட்டு வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

அப்போது பரமசிவத்தின் மனைவி ரேகா(19), போலீஸ் நிலையம் உள்ளே சென்றார். அங்கு அவரது கணவர் பரமசிவத்தை போலீசார் அடித்து துன்புறுத்தியதாகவும், அதை ரேகா நேரில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ரேகா, செங்குன்றம் போலீஸ் நிலையம் எதிரே ஜி.என்.டி. சாலையில் அதிக வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கைக்குழந்தையுடன் சாலையின் குறுக்கே சென்று தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், திடீர் பிரேக் பிடித்து வாகனங்களை நிறுத்தினர். இதனால் ரேகா மீது வாகனங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டதால், கைக்குழந்தையுடன் அவர் உயிர் தப்பினார்.

உடனடியாக போலீசார், கைக்குழந்தையுடன் ரேகாவை அங்கிருந்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். தனது கணவரை போலீசார் அடித்து துன்புறுத்துவதால் விரக்தியில் தனது குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். ரேகாவை போலீசார் சமாதானம் செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரமசிவம், சுபாஷ் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்