சோமரசம்பேட்டை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

சோமரசம்பேட்டை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2019-01-20 22:45 GMT
சோமரசம்பேட்டை,

திருச்சி தோகைமலை ரோடு சோமரசம்பேட்டையிலும், அல்லித்துறை சரவண புரம் அருகிலும் டாஸ்மாக்் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வந்தது. இந்த இரு கடைகளையும் மூட வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனாலும் அந்த கடைகளை மூட நட வடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அல்லித்துறை பாலாஜிநகரில் நேற்று மேலும் ஒரு டாஸ்மாக்கடை திறக்க இருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை, சமூக நீதி பேரவையின் தலைவர் சிவா, மணிகண்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 6 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால், அந்த கடை திறக்கப்படவில்லை.

பகல் 12 மணிக்கு ஏற்கனவே அந்த பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவே மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள், அந்த கடையையும் மூட சொன்னதால் மூடப்பட்டது. அப்போது ஒரு மதுப்பிரியர் கடையை திறக்ககோரி சத்தம் போட்டார்.

மதியம் 1 மணி அளவில் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களிடம் ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம், வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அல்லித்துறை பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் கடை செயல்படவும், புதிதாக எந்த கடையும் இந்த பகுதியில் திறக்கப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் உறுதி யளித்ததன் பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். 

மேலும் செய்திகள்