‘தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை’ நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

‘தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை’ என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Update: 2019-01-20 23:15 GMT
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலுக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால்தான் கோவிலில் வந்து தரிசனம் செய்ய வந்தேன். தனிக்கட்சி தொடங்க இருப்பதால் தான் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துகிறீர்களா? என கேட்கிறீர்கள். கோவிலுக்கு வந்து தான் கட்சி தொடங்க வேண்டுமா?

சமீப காலமாக சில ஊடகங்களில், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தனிக்கட்சி தொடங்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு அ.தி.மு.க.வில் அம்மாவால், பல பதவிகளை நான் பெற்று இருக்கின்றேன். கடைசி வரை மக்கள் தொண்டனாகவே இருப்பேன்.

மேற்கு வங்காளத்தில் நடந்த கூட்டத்திற்கு ராகுல்காந்தி போகவில்லை, மாயாவதி போகவில்லை. எந்த ஒரு பலனும் இந்த கூட்டத்தினால் ஏற்படப் போவதாக தெரியவில்லை. தமிழகத்தில் இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சி காலம் இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீங்கள் தொடர்ந்து பா.ஜனதாவை எதிர்த்து வருகிறீர்களே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தம்பிதுரை, பாரதீய ஜனதாவுடன், அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லையே. மத்திய அரசும், மாநில அரசும் நட்பாக இருக்கிறது. மத்திய அரசில் இருந்து ரூ.14 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.5 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோயுள்ளது. அதனால் உரிமை கேட்டு பேசுகின்றோம்.

அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினைகளை பேசுவதற்கு எச்.ராஜாவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது. கட்சிக்குள் கலகம் ஏற்படுத்துவது முறையானது கிடையாது. ஒரு கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை பேசுவதற்கு மற்ற கட்சிகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்றார்.

பேட்டியின்போது ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்