திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் அமர்வு, சிறப்பு தரிசனம் ரத்து

திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் அமர்வு, சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

Update: 2019-01-20 23:00 GMT
திருவண்ணாமலை, 

தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகா தீபம் ஏற்றப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலமும் செல்வார்கள். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று (திங்கட்கிழமை) காலை 11.08 வரை நடைபெற உள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் நேற்று பகலில் இருந்தே திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பகலில் குறைந்த அளவிலான பக்தர்களே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கிரிவலத்தை முன்னிட்டு கோவிலிலும், திருவண்ணாமலை நகரத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்