மந்திராலயா நோக்கி விவசாயிகள் அரை நிர்வாணமாக சென்றதால் பரபரப்பு மான்கூர்டில் தடுத்து நிறுத்தம்

மந்திராலயா நோக்கி விவசாயிகள் அரை நிர்வாணமாக ஊர்வலம் சென்றதால் பரபரப்பு உண்டானது. அவர்களை போலீசார் மான்கூர்டில் தடுத்து நிறுத்தினார்கள்.

Update: 2019-01-20 23:44 GMT
மும்பை,

சத்தாரா மாவட்டம் கண்டலா தாலுகாவில் கடந்த 2008-ம் ஆண்டு விவசாயிகளின் நிலத்தை மாநில அரசின் சிட்கோ மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டு கழகம் (எம்.ஐ.டி.சி.) ஆகியவை வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக கையகப்படுத்தி உள்ளன. ஆனால் அந்த நிலத்திற்கான இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. அந்த தொகையை கேட்டு விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இழப்பீட்டு தொகை அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் இழப்பீடு தொகையை கேட்டு நேற்று நவிமும்பை பன்வெலில் உள்ள சிட்கோ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவை முற்றுகையிட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் பன்வெலில் இருந்து அரை நிர்வாணமாக மந்திராலயா நோக்கி ஊர்வலமாக வந்தனர். மான்கூர்டில் விவசாயிகள் ஊர்வலம் வந்த போது, போலீசார் அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் நடுவழியில் தடுத்து நிறுத்தினர்.

உடனே விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில் இன்று(திங்கட்கிழமை) மந்திராலயாவிற்கு பேரணியாக செல்ல இருப்பதாகவும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரி சுபாஷ் தேசாய் ஆகியோரை சந்தித்து தங்களுக்கு உரிய இழப்பீடு குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்