புயல் நிவாரணம் வழங்கக்கோரி அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் வேதாரண்யம் அருகே நடந்தது

புயல் நிவாரணம் வழங் கக்கோரி வேதாரண்யம் அருகே அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-01-21 23:00 GMT
வேதாரண்யம்,

கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கரியாப்பட்டினம், செட்டிபுலம் கிராமங்களில் சுமார் ஆயிரம் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்த இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்களை இதுவரை வழங்கவில்லை. இதை கண்டித்தும், உடனே புயல் நிவாரணம் வழங்கக்கோரியும் கரியாப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிஞர் மாசி, ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சரவணமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை அமைப்பாளர் நந்தன், தி.மு.க. ஊராட்சி செயலாளர் ஏகாம்பரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒருவாரத்துக்குள் விடுப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்