அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் டி.டி.வி. தினகரன் பேச்சு

அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம் என்று பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் பேசினார்.

Update: 2019-01-21 23:45 GMT
பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை 2-வது நாளாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மேற்கொண்டார். முன்னதாக அவர், பார்த்திபனூரில் உள்ள மகால் ஒன்றில் அனைத்து சமுதாயத்தினர்,பல்வேறு அமைப்பினரை சந்தித்து பேசினார்.அப்போது அவர்களிடம் வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பார்த்திபனூரில் இருந்து புறப்பட்டு கீழப்பெருங்கரை, கமுதக்குடி, பரமக்குடி பொன்னையாபுரம், காந்தி சிலை,அரியனேந்தல், பரமக்குடி, எமனேசுவரம், வைகை நகர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். அவருக்கு பல்வேறு அமைப்புகள், கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:- ஒற்றுமையாக இருக் கும் நம்மிடையே பல பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். நாம் பிறப்பால் வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் இந்தியர்கள், தமிழர்கள் என்ற உணர்வுடன் இருக்க வேண்டும். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தென் மாவட்டங்கள் சிறப்புடன் இருக்க வேண்டும். ஏழைகள், விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் காக்காமலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. அமைச்சர்கள் தான் நன்றாக வாழ்கின்றனர்.

அ.ம.மு.க. அனைத்து மதத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பொதுவான கட்சி. ஜெயலலிதா பெயரை சொல்லி இந்த அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் மக்களாட்சி மலர வேண்டும். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தால் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிப்போம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா சொன்னதால் தான் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் ஆக்கினார்கள். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜானகி முதல்-அமைச்சர் ஆகியும் 2 ஆண்டுகள் கூட ஆட்சியைத் தொடர முடியாமல் போனது. 30 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் தாயாக, தோழியாக, சகோதரியாக இருந்ததால் தான் அவர் சொன்னதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சராக ஏற்றுக்கொண்டனர். இரண்டு முறை முதல்- அமைச்சராக இருந்தபோது ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அவர் வடக்கில் இருந்தவர்களுக்கு ஏஜென்டாக மாறினார்.

தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி வேரூன்ற வேண்டும் என்ற வகையில் அவர் செயல்பட்ட காரணத்தால் தான் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினோம். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்பட 10 அமைச்சர்கள் சேர்ந்து சசிகலா தான் பொதுச்செயலாளராகவும் முதல்-அமைச்சராகவும் வர வேண்டுமென வற்புறுத்தினார்கள். அதன்படி சசிகலாவை தேர்வு செய்தனர். அவர் முதல்- அமைச்சராக முடியாத காரணத்தால் எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக்கினார்.

ஆனால் அவர் ஆட்சியில் அமர்ந்த உடனே சசிகலாவும் டி.டி.வி. தினகரனும் இருக்கக்கூடாது என வடக்கே உள்ளவர்கள் சொன்னதைக் கேட்டு என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலாவையும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து ஆட்சியும் கட்சியும் மீட்கப்பட வேண்டும் என இவர்களாகவே கூறிக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவர்களோடு சேர்ந்த 33 பேரும் டெல்லிக்கு ஏவல் வேலை செய்கின்றனர். ஆதரவாக வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்கள் என்ன தவறு செய்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு டாக்டர் முத்தையா அமைச்சராக அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.

நாடாளுமன்ற தேர்தலுடன் வருகிற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.விற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அவருடன் மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையாவும் மக்களிடம் ஆதரவு திரட்டினார். வழி நெடுகிலும் டி.டி.வி. தினகரனுக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், பொதுமக்கள், வியாபாரிகள், மலர்மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.

மேலும் செய்திகள்