புழுதி பறப்பதால் சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி பொள்ளாச்சியில் தி.மு.க.வினர் நூதன போராட்டம்

புழுதி பறப்பதால் சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கி தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-22 00:23 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலைகள் தோண்டப்பட்டு, புழுதி பறக்கின்றன. எனவே சாலைகளை சீரமைக்க கோரியும், புழுதி பறப்பதால் ஏற்படும் சுவாச கோளாறு ஏற்படுவதாக கூறி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று தி.மு.க.வினர் வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

நகர அவை தலைவர் பழனிசாமி, துணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் புழுதியால் ஏற்படும் சுவாச கோளாறுகள் குறித்து பேசினார். மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், வாகன ஓட்டிகளுக்கு முககவசத்தை அணிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா அடுத்த மாதம் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு திருவிழாவிற்கு முன் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டிய சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சாலையை சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் ஓராண்டு ஆகியும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. புழுதி பறப்பதால் சுவாச கோளாறு மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு, தினமும் அரசு ஆஸ்பத்திரிக்கு பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக சாலைகளை சீரமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர துணை செயலாளர்கள் விஜயா, நாச்சிமுத்து, மாவட்ட பிரதிநிதி கண்ணன், நிர்வாகிகள் ஞானவேல், தர்மராஜ், ஆறுமுகம், கருப்பையா மற்றும் பலர் கலந்துகொண் டனர்.

மேலும் செய்திகள்