கோவை மாவட்டத்தில் 8 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 8 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.

Update: 2019-01-22 22:45 GMT
கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை தொடங்கி அதில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கோவை மாவட்டத்தில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கினர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர் உள்பட 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் கலெக்டர் அலுவல கம் உள்பட அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதே போல அரசு பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதால் குறைந்த ஆசிரியர்களே பணிக்கு வந்தனர். சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமித்து வகுப்புகளை நடத்த கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கோவை சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமத்தம்பட்டி அருகே உள்ள சுப்பராயன்புதூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்க சென்றனர். இதனால் நேற்று காலை அந்த பள்ளி திறக்காமல் பூட்டி கிடந்தது. அந்த பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்த மாணவ- மாணவியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் நீண்ட நேரம் காத்திருந்தும் பள்ளி திறக்கப்படாததால் மாணவ-மாணவிகள் வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஒரு சில பள்ளி மாணவ-மாணவியர்கள் அங்கேயே விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா செல்வராஜ் கூறியதாவது:-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகிறோம். அரசு தரப்பில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், போராட்டம் தீவிரம் அடைய தொடங்கியது. குறிப்பாக அரசு அழைத்து பேச வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஈடுபட்டது.இதனை தொடர்ந்து முதல்-அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு பிறகு ஊதிய குழுவை அரசு அமல்படுத்தியது. அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புதிய ஓய்வூதியம் தொடர்பாகவும், ஊதிய முரண்பாடுகள் தொடர்பாகவும் அரசு தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை. பொது நல வழக்கு விசாரணை மீண்டும் கடந்த ஜனவரி மாதம் வந்தது. அப்போது, அரசு தரப்பில் மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

கடைசியாக ஒரு நபர் குழு அறிக்கை, ஊதிய முரண்பாடு மற்றும் நிலுவை தொகை தொடர்பாக அரசு தரப்பில் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இதனால், ஜாக்டோ-ஜியோவின் போராட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அதனால், ஜாக்டோ-ஜியோ ஏற்கனவே அறிவித்தபடி போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தது. இதன்படி இன்று (நேற்று) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

2003-க்கு பின்னர் வந்த எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், 2003-க்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம். இது சரிதானா? என்பதை அரசு உணர வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்த அதற்கென்று குழந்தைகளின் இயல்புக்கு ஏற்றால் போல் பாடம் நடத்துவதற்கு மாண்டிச்சோரி முறை கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி, பேரூர், அன்னூர், சூலூர் உள்பட 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாளை (இன்று) இதேபோன்று 9 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தாலும் கவலைப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்