நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

Update: 2019-01-22 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று உள்ளூர் திட்டக்குழுமத்துக்கும், நகராட்சி ஆணையருக்கும் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் நாகர்கோவில் கோர்ட்டு ரோடு, கே.பி.ரோடு, வெட்டூர்ணிமடம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.

நேற்று 2-வது கட்டமாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின்பேரில், நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், நகராட்சி ஆணையர் சரவணக்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால், வருவாய் அதிகாரி குமார்சிங் மற்றும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நாகர்கோவில் நகரப்பகுதியில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்ட வீடு, கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.

அதன்படி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தெருவில் நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட பெரிய மாடி வீடு ஒன்றுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர். அந்த வீடு பூட்டப்பட்டு இருந்ததால் வெளிப்புறமாக பூட்டி சீல் வைத்தனர். அந்த வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும் அகற்றப்படவில்லை.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே கே.பி.ரோடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஒரு டீக்கடை உள்பட 6 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி ‘சீல்‘ வைத்தனர்.

கலெக்டர் அலுவலக பகுதியில் நடந்த இந்த ‘சீல்‘ வைப்பு நடவடிக்கையால் நேற்று அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்