ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி

ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-01-23 00:06 GMT
சேலம், 

சேலம் வலசையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 30). இவர் வீராணம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2013-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ராபர்ட், பக்கிரிசாமி, சக்ரவர்த்தி, முருகேசன் மற்றும் சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ், ராம் ஆகிய 6 பேர் சேர்ந்து ரூ.4 லட்சம் கொடுத்தால் ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறினர். இதை நம்பி நானும் தனது நண்பர் ஒருவரிடம் பணம் பெற்று அவர்களிடம் ரூ. 8 லட்சம் கொடுத்தேன். பல ஆண்டுகள் ஆகியும் அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதனால், அவர்களிடம் வேலை வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பல முறை கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.

எனவே வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரூ. 8 லட்சத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

அதன் பேரில் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்