பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்த வியாபாரிகள்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்தனர்.

Update: 2019-01-23 23:00 GMT
பொள்ளாச்சி,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவ்வப்போது திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் நேற்று கமிஷனர் கண்ணனிடம், மொத்த வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்தனர். 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், மாரியப்பன், சீனிவாசன், ஜெயபாரதி, விஜய் ஆனந்த், ஞானசேகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 1-ந் தேதி முதல் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரைக்கும் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் வரை அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 12 பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபார கடைகள் மூடப்பட்டு இருந்தன.

இருப்பினும் அந்த கடைகளில் விற்பனை நடைபெறுகிறதா? என்று கண்காணித்து வந்தோம். இந்த நிலையில் அவர்களே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டனர். நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் மற்றும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் அளவின்படி ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராத தொகை வசூலிக்கப்படும். நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தூளாக்கி, தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், யாரும் வாங்குவதில்லை. இதற்கிடையில் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தால், அபராதம் விதிப்பார்கள். இதன் காரணமாக கடைகளை திறக்காமல் இருந்து வந்தோம். இதற்கிடையில் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனங்கள் அவற்றை வாங்காமல் திருப்பி அனுப்பின. இதனால் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்