ஆசிரியர்கள் வராததால் 90 பள்ளிகள் மூடல் மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம்

ஆசிரியர்கள் வராததால் 90 பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-01-23 23:00 GMT
பொள்ளாச்சி,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பொள்ளாச்சி வணிக வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 75 பேரில் 59 பேரும், தெற்கு ஒன்றியத்தில் பணிபுரியும் 33 பேரில் 14 பேரும், வடக்கு ஒன்றியத்தில் பணிபுரியும் 36 பேரில் 17 பேரும், ஆனைமலை ஒன்றியத்தில் பணிபுரியும் 33 பேரில் 17 பேரும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பணிபுரியும் 36 பேரில் 10 பேரும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் 34 பேரில் 15 பேரும் நேற்று பணிக்கு வரவில்லை. இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் 106 பேரில் 15 பேரும், சப்-கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 11 பேரில் 6 பேரும் பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதற்கிடையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால், நேற்று 90 பள்ளிகள் வரை திறக்கப்படவில்லை. ஒரு சில பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மட்டும் வகுப்புகளில் உட்கார்ந்து படித்தனர். அதன்பிறகு மதிய உணவு வழங்கிய பின், மாணவ-மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு பயிற்சி தேர்வுகள், சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

இதற்கிடையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சிறப்பு வகுப்புகள் நடைபெறவில்லை. இதனால் வருகிற பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 92 பள்ளிகள் உள்ளன. இங்கு 283 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 252 பேர் பணிக்கு வரவில்லை. தெற்கு ஒன்றியத்தில் 81 பள்ளிகள் உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் 315 ஆசிரியர்களில் 245 பேர் பணிக்கு வரவில்லை. 6 பேர் விடுமுறையில் சென்று விட்டனர்.

இதேபோன்று ஆனைமலை ஒன்றியத்தில் 85 பள்ளிகளில் 304 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 260 பேர் பணிக்கு வரவில்லை. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் 45 உள்ளன. இங்கு பணிபுரிந்து வரும் 937 ஆசிரியர்களில் 456 பேர் பணிக்கு வரவில்லை.

கல்வி மாவட்டத்தில் ஆசிரியர்கள் வராததால் அரசு பள்ளிகள் செயல்பட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தனியார் மெட்ரிக் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி நேர ஆசிரியர் என 300 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் 90 பள்ளிகள் வரை செயல்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்