வெள்ளனூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயம்

வெள்ளனூர் அருகே சந்தனக்கூடு விழாவிற்கு சென்ற போது சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-01-23 23:00 GMT
அன்னவாசல்,

திருத்தணியில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் ஒரு சுற்றுலா வேனில் கமுதி அருகே உள்ள ஆனையூரில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு சென்றுள்ளனர். வேனை வேலூர் மாவட்டம், வாலாகப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (வயது 45) என்பவர் ஓட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் அருகே உள்ள மேலூர் என்னும் இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் உள்ள வயல் காட்டில் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த தாம்பரத்தை சேர்ந்த முஸ்தபா (48), திருத்தனியை சேர்ந்த முகமது ஆசிக் (18), அதே பகுதியை சேர்ந்த முகமது மாலிக் (23), மீரா (14), சாஜிதாபானு (18), அனீஸ்பாத்திமா (35), பாத்திமா (36), சித்தூரை சேர்ந்த ஜியாவுல்ஹக் (34), சென்னையை சேர்ந்த மஜீத் (56), தெளத்நிஷா (52), தூத்துக்குடியை சேர்ந்த சதாம் உசேன் (26), டிரைவர் பாஸ்கர் (45) ஆகிய 12 பேர் படுகாயமடைந்தனர். அப்போது வேனில் உள்ளவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதை யடுத்து அந்த வழியாக சென்றவர்கள் வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்