ஈரோடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை வாழைத்தாரில் ரசாயனம் அடிப்பதாக புகார்

வாழைத்தாரில் ரசாயனம் அடிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து ஈரோடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2019-01-23 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், கொடுமுடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்காக வருகிறது. இங்கிருந்து வெளியூர்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக வாழைத்தார்களை வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில் வாழைத்தாரை பழுக்க வைக்க ரசாயனம் அடிப்பது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் நேற்று செய்தி பிரசுரமானது. அதன் எதிரொலியாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் சோதனை நடத்தினார்கள்.

அங்கு வாழைத்தார்களில் ரசாயனம் தெளிக்கப்பட்டு உள்ளதா? என்று பார்வையிட்டனர். மேலும், குடோனில் வைக்கப்பட்டு உள்ள வாழைத்தார்களையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். வீடியோவில் உள்ள வியாபாரி யார்? எப்போது ரசாயனம் தெளிக்கப்பட்டது? என்று வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், காய்களை பழுக்க வைக்க ரசாயனம் தெளிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் நியமன அதிகாரி கலைவாணி கூறியதாவது:-

ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார்களில் ரசாயனம் தெளிக் கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து சோதனை நடத்தினோம். இதில் ரசாயனம் சேர்க்கப்பட்ட வாழைத்தார் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், வியாபாரிகளிடம் விசாரணை நடத்தியதில், பண்டிகை காலத்தின்போது வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி வாகனத்தில் ஏற்றும்போது ரசாயனம் தெளித்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

வாழைத்தாரில் பழுக்க வைப்பதற்காக எத்தலின் ரசாயனம் அடிப்பது, கார்பைடு கல் வைப்பது போன்ற நடவடிக்கைகளை கையாளக்கூடாது என்று வியாபாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். ரசாயனம் சேர்க்கப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படும். மேலும், நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூட வாய்ப்பு உள்ளது. எனவே ரசாயனம் கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்