வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் 8 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 லட்சம் பேர் பயன்பெற்று உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-23 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமரகிரி பஞ்சாயத்தில் புறக்கடைகோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ், கிராமத்தில் உள்ள மகளிருக்கு நாட்டு கோழிகள் வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் குமாரகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 200 மகளிருக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., நெல்லை- தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது;-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெண்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தோடு இலவசமாக வெள்ளாடுகள், கறவை பசுமாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். தமிழகத்தில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 8 லட்சம் பேர் இதுவரை பயன்பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 400 மகளிர்களுக்கு தலா 50 நாட்டு கோழிகள் வழங்கப்படுகிறது. அதேபோல் 450 பயனாளிகளுக்கு கறவை பசுமாடுகள், 4 ஆயிரத்து 300 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின்கீழ் கிராமத்தில் உள்ள மகளிருக்கு 50 நாட்டு கோழிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, இந்த திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக செயல்படுத்திட உத்தரவிட்டார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 400 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி மகளிர் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பிரேமா, கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் ஜோசப் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோர் 45 பயனாளிகளுக்கு கன்றுகளுடன் கூடிய பசு மாடுகளையும், 30 பயனாளிகளுக்கு கோழிக்கூண்டுகளுடன் தலா 50 நாட்டு கோழிகளையும் வழங்கினர்.

விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், நிலவள வங்கி தலைவர் ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்