கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் 6 பேர் சிக்கினர்

புதுவையில் நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் 6 பேர் சிக்கினர்.

Update: 2019-01-23 23:00 GMT
புதுச்சேரி,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை ‘சீ விஜில்-2019’ என்ற பெயரில் நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து புதுவையையொட்டி உள்ள கிராமங்களில் கடலோர போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தவளக்குப்பம் அருகே நல்லவாடு மீனவ கிராமத்தில் தீவிரவாதிகள் வேடமணிந்த கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் கார்த்திக், பிராங்களின் ஆகியோர் நேற்று முன்தினம் பிடிப்பட்டனர்.

2-வது நாளான நேற்று புதுச்சேரி தலைமை செயலகம் அருகே மயில்சாமி என்பவரையும் புதுவை கடலோர போலீசார் பிடித்தனர். ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்கு நுழைய முயன்ற மாயாண்டி என்பவரை புதுச்சேரி பெரியகடை போலீசார் பிடித்தனர். மாயாண்டியிடமிருந்து போலி வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.

மேலும் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு நுழைய முயன்றதாக கார்த்திக், பிராங்களின் ஆகியோர் சிக்கினர். இவர்கள் 2-வது முறையாக சிக்கினர். அதேபோல் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே அருண், அபில் ஆகிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள் 2 பேரை லாஸ்பேட்டை போலீசார் பிடித்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் நடந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்