கோதாவரி–காவிரி இணைப்பு என்று கூறி காவிரி பாசனத்தை அழிக்க மத்திய அரசு சதி பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

கோதாவரி–காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய அரசு சதி செய்வதாக பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 23:15 GMT
சுந்தரக்கோட்டை,

மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக்கட்ட தாக்கல் செய்துள்ள வரைவு திட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரம் பிரதமர் மோடியை மதுரையில் சந்திக்க உள்ள முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழகம் சார்பில் கண்டனத்தை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவிக்க வேண்டும். கோதாவரி–காவிரி இணைப்பு என்று கூறி, காவிரி பாசனத்தை அழிக்க மத்திய மந்திரி நிதின்கட்கரி சதி செயலில் ஈடுபடுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 2017–18–ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.


காவல்துறை அனுமதித்த இடங்களில் அவர்களின் முழு பாதுகாப்போடு போக்குவரத்து பாதிப்பின்றி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எதிர்ப்பு பிரசாரம் செய்த நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் 4 போலீஸ் நிலையங்களில் எனது பெயரில் (பி.ஆர்.பாண்டியன்) வழக்கு தொடந்திருப்பது கேலிக்கூத்தானது. மத்திய அரசின் நெருக்கடியால் வழக்கு போடப்பட்டதா? அல்லது தமிழக அரசே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறதா? என்பதை முதல்–அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். குடியரசு தினத்தன்று திருக்காரவாசல் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்