தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய 60 யானைகள் விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை 60 யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2019-01-24 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர், தாவரக்கரை உள்ளிட்ட வனப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில் வனத்துறையினர் தாவரக்கரை வனப்பகுதியில் உள்ள 60 யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினர்.

அப்போது யானைகள் தாவரக்கரையில் காட்டில் இருந்து வெளியேறி அகலக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்களை தின்று சேதப்படுத்தியது. மேலும் ரோஜா செடிகளையும் நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

தற்போது 60 யானைகளும் ஜவளகிரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்