கழுத்தை அறுத்து பெண் கொலை, சொத்து ஆவணங்களை எடுத்து சென்ற கொலையாளிகள்?

கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சொத்து ஆவணங்களை கொலையாளிகள் எடுத்து சென்றார் களா? என 5 தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-01-24 22:45 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் குள்ளனம்பட்டியை அடுத்த பர்மா காலனியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கத்தார் நாட்டில் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 37). நேற்று முன்தினம் இவர், வீட்டில் தனியாக இருந்தபோது கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபாகரனின் வீட்டை சுற்றிலும் பொருத்தியிருந்த 5 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொலையாளிகள் எடுத்து சென்றனர்.

வீட்டில் இருந்த அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் இருந்த சொத்து ஆவணங்கள் சிதறி கிடந்தன. எனவே, கலைச்செல்வியை கொன்று விட்டு, சொத்து ஆவணங்களில் முக்கியமான சிலவற்றை கொலையாளிகள் எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும் நகைகளும் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதனால் சொத்துக்காக கொலை நடந்ததா? அல்லது நகைக்காக கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கலைச்செல்வி உள்பட உறவினர்களின் செல்போனுக்கு வந்த அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதுதவிர நேற்று முன்தினம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை அந்த பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கத்தாரில் இருந்து நேற்று பிரபாகரன் திண்டுக்கல்லுக்கு வந்தார். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலைச்செல்வியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபாகரனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகேயுள்ள திருப்பாலை ஆகும். இதனால் அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். 

மேலும் செய்திகள்