பெரம்பலூரில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

பெரம்பலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

Update: 2019-01-26 22:45 GMT
பெரம்பலூர்,

நாடு முழுவதும் நேற்று 70-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உடனிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், தேசியக்கொடி நிறத்தினால் ஆன பலூன்களையும் கலெக்டர் சாந்தா, போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் பறக்கவிட்டனர். இதையடுத்து கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பில் தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, பாரத சாரண- சாரணியர் படை, ஜூனியர் ரெட் கிராஸ், தேசிய பசுமைப்படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சாந்தா சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் 8 பேருக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 17 போலீசாருக்கு தமிழக முதல்- அமைச்சரின் பதக்கங்களையும், மெச்சத்தகுந்த வகையில் பணி செய்தமைக்காக 12 போலீசாருக்கு சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் பல்வேறு துறைகள் மூலம் மொத்தம் 265 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 63 ஆயிரத்து 608 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று தேசிய கொடியேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்