பருவநிலை மாற்றத்தால் வரத்து குறைந்தது சென்னையில் மீன்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு

பருவநிலை மாற்றத்தால் மீன்கள் வரத்து குறைந்தது. இதனால் சென்னையில் மீன்கள் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

Update: 2019-01-27 22:45 GMT
சென்னை,

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வீசும் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்குவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பும் நிலை உள்ளது.

எனவே கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் வியாபாரி எம்.சி.பி. சதீஷ்குமார் கூறியதாவது:-

மீன்கள் வரத்து குறைவால் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் மீன்கள் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி வஞ்சரம் (சிறியது) ஒரு கிலோ ரூ.650, வஞ்சரம் (பெரியது) ரூ.700, மத்தி ரூ.100, கவளை ரூ.100, பெரிய சங்கரா ரூ.250, சுறா ரூ.180, வெள்ளை கிழங்கா ரூ.350, ஷீலா ரூ.300, அயிலா ரூ.170, ஏரி வவ்வால் ரூ.100, கட்லா ரூ.120, பாறை ரூ.200, நெத்திலி- ரூ.130 என மீன் வகைகள் விலை உயர்ந்துள்ளது.

ரூ.120-க்கு விற்பனையான நண்டு ரூ.180 ஆக அதிகரித்துள்ளது. இறால் வகைக்கு ஏற்ப ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மீன்கள் விலை அதிகரித்தாலும் சென்னை திரு.வி.க.நகர், சிந்தாதிரிப்பேட்டை, வானகரம், புழல் காவாங்கரை உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்டுகளில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

மேலும் செய்திகள்