ஈரோடு மாவட்டத்தில் 36 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் தற்காலிக பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் 36 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்காலிக பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

Update: 2019-01-27 21:45 GMT
ஈரோடு, 

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேற்று விண்ணப்பங்களை வழங்க ஏராளமானவர்கள் திரண்டனர். அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அங்குள்ள ஒரு பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்து வருகிறோம். நாளை (அதாவது இன்று) பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களை பொறுத்து காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும். அதற்கேற்ப தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 36 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்