கலெக்டர் அலுவலகத்தில் கோவில் பெயரை மாற்றக்கோரி குழந்தைகளுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

உப்புக்கோட்டையில் கோவில் பெயரை மாற்றக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-01-28 22:15 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மனு அளிக்க உப்புக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்தனர். அவர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளி சீருடையில் அழைத்து வந்து இருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கள் ஊரில் உள்ள ஒரு கோவிலின் பெயரை மாற்றக்கோரியும், கோவிலுக்குள் அனைவரும் சென்று வழிபாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘உப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோவில் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதை மீண்டும் முன்பு இருந்தது போன்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சுதந்திரமாக வழிபாடு நடத்த வழிவகை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மக்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘அம்பேத்கர் நகரில் சேதம் அடைந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டி இருந்தது. இந்த தொட்டி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே கிடக்கிறது. அவற்றை முழுவதும் அப்புறப்படுத்தி, புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

பி.டி.ஏ. பவுண்டேசன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த பி.டி.ஏ. பவுண்டேசன் நிறுவனம் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் காப்பீடு செய்து இருந்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,100 கோடி வரை மோசடி நடந்துள்ளது. செபி நிறுவனம் தீர்ப்பு கூறிய பிறகும் இதுவரை பொதுமக்களிடம் ஏமாற்றிய பணத்தை திருப்பித் தரவில்லை.

எனவே, பொதுமக்களின் பணத்தை இந்த நிறுவனத்திடம் இருந்து விரைவில் மீட்டுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் அவர்கள் அளித்தனர்.

பூதிப்புரத்தை சேர்ந்த சின்னமணி என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘கடந்த 10 மாதத்துக்கு முன்பே தாட்கோவில் பசு மாடு வாங்குவதற்கு கடன் வேண்டி மனு அளித்த 13 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சி முடிந்த பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்தனர். ஆனால், வங்கி மேலாளர் கடன் கொடுக்க மறுக்கிறார். எனவே கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்