அரசு பள்ளியில் வகுப்பறை திறக்காததால் தற்காலிக ஆசிரியைகள், மாணவர்கள் காத்திருப்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

பூதப்பாண்டி அரசு பள்ளியில் வகுப்பறை திறக்கப்படாததால் தற்காலிக ஆசிரியைகள், மாணவர்கள் காத்திருப்பதை கண்டு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-29 23:00 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டியில் ப.ஜீவானந்தம் நினைவு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக ஆசிரியர்களின் போராட்டத்தால் பள்ளி மூடப்பட்டு இருந்தது. உடனே கல்வித்துறை சார்பில், மாணவர்களின் நலன்கருதி தற்காலிக பயிற்சி ஆசிரியையாக 2 பேரும், பொறுப்பு ஆசிரியையாக ஒருவரும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து பாடம் நடத்தினர்.

இந்த பள்ளியில் துப்புரவு பணியாளராக லெட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் மாலையில், வகுப்பறையை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் வந்து திறப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் லெட்சுமி பணிக்கு வந்தார். நேற்று காலையில் பணிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கூடத்தின் கதவுகள் திறக்கப்படவில்லை.

வழக்கம்போல் பள்ளிக்கு 8.30 மணியில் இருந்து மாணவ–மாணவிகள் வரத்தொடங்கினார்கள். அப்போது, பள்ளி வகுப்பறை கதவுகள் திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அந்தந்த வகுப்பறையின் வாசலில் அமர்ந்து இருந்தனர். அவர்களை தொடர்ந்து தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியைகளும் வந்தனர். ஆனால், நேரம் செல்லச்செல்ல வகுப்பறை திறக்கப்படாததால் மாணவர்களும் ஆசிரியைகளும் விரக்தி அடைந்தனர்.

காலை 11 மணி வரை மாணவர்கள் வகுப்பறை வாசலில் அமர்ந்து இருப்பதையும், ஆசிரியைகள் நிற்பதையும் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் இந்த தகவல் லெட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது. காலை 11.30 மணியளவில் லட்சுமி பள்ளிக்கு ஓடிவந்து வகுப்பறைகளை திறந்துவிட்டார். அதன் பிறகு பரபரப்பு அடங்கியது.

பள்ளியின் வகுப்பறை கதவுகள் திறக்காததால் மாணவர்கள், ஆசிரியைகளும் 2 மணிநேரம் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்புரவு பணியாளர் லெட்சுமி காலதாமதமாக வந்து வகுப்பு அறையை திறந்தது ஏன்? என்று தெரியவில்லை. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்