மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நீடிக்கிறது, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3,633 பேர் பணிக்கு திரும்பவில்லை

தேனி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது. நேற்று 3 ஆயிரத்து 633 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களில் சாலை மறியல் செய்ய முயன்றதாக 179 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-01-29 23:00 GMT
தேனி,

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந்தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதற்கு நேற்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

அதன்படி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலர் நேற்று பணிக்கு திரும்பினர். ஆனால், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பலர் பணிக்கு திரும்பவில்லை. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் நேற்று 2 ஆயிரத்து 382 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இது மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் 35.16 சதவீதம் ஆகும்.

அரசு ஊழியர்களும் நேற்று வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். 2 ஆயிரத்து 382 ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 633 பேர் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர். இது மொத்த எண்ணிக்கையில் 23.57 சதவீதம் ஆகும்.

வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நேற்றும் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் மறியல் செய்வதற்காக ஆசிரியர்கள் வந்தனர். மறியலில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிலர் சாலையோரம் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து வரும் வழியிலேயே சிலர் கைது செய்யப்பட்டனர்.

அந்த வகையில் நேற்று 150 பெண்கள் உள்பட மொத்தம் 179 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தேனியில் உள்ள 2 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதில் சிலரை சிறையில் அடைக்கப் போவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், எனது வேலை எங்கே? என்று கோஷம் எழுப்பியும் தேனி நேரு சிலை சிக்னல் அருகில் சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 22 பேர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்