திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு

திண்டுக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சத்துணவு பெண் ஊழியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-29 23:00 GMT
திண்டுக்கல், 

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றும் பலர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதற்கிடையே திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து பஸ்நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் எம்.ஜிஆர். சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் அமர்ந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.

இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்ய முயன்றனர். பெண்கள் உள்பட சிலரை கையை பிடித்து இழுத்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஒருசிலரை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் அத்துமீறி செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். அதேநேரம் மறியலில் பங்கேற்ற பலர் போலீசிடம் சிக்காமல் நழுவினர். ஒருசிலர் அருகில் இருந்த கடைகளுக்குள் புகுந்து கொண்டனர். இறுதியில் ஒருவழியாக மறியலில் ஈடுபட்ட 162 பெண்கள் உள்பட மொத்தம் 228 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள நடுப்பட்டியை சேர்ந்த சத்துணவு ஊழியர் நாகராணி (வயது 45) மயங்கி சாலையில் விழுந்தார். உடனே போலீசாரை கண்டித்து பெண்கள் கோஷமிட்டனர். பின்னர் நாகராணியை ஆட்டோவில் ஏற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு நீதிமன்ற ஊழியர்களும் ஆதரவு தெரிவித்ததோடு நீதிமன்றத்தின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோல் திண்டுக்கல் மாநகராட்சி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். 

மேலும் செய்திகள்