திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய வாலிபருக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-01-30 23:00 GMT
பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பாளையக்குடியை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 20). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொக்லைனை இயக்கி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பருத்தி காட்டில் நின்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை, மகாதேவன் கடத்தி சென்று தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தார்.

பின்னர் அந்த சிறுமியை சென்னைக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சிறுமியிடம் இருந்த நகை, ரூ.10 ஆயிரத்தை பறித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது உறவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதன்பேரில், உறவினர்கள் சென்னை சென்று சிறுமியை மீட்டு வந்தனர்.

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மகாதேவன் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த் நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில், சிறுமியை கடத்தி சென்றதற்காக மகாதேவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை வீட்டில் அடைத்து வைத்ததற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து மகாதேவனை போலீசார் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்