விவசாயிகளிடம் இருந்து 1,600 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு - கலெக்டர் தகவல்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 1,600 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

Update: 2019-01-30 23:00 GMT
திண்டுக்கல், 

வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2017-18-ம் ஆண்டில் விவசாயிகள் சாகுபடி செய்த உளுந்து, பாசிப்பயறு, துவரை போன்ற பயறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் 1,700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாக பயன் அடைந்தனர். மேலும் வெளி மார்க்கெட்டிலும் பயறு வகைகளின் விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்தது.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அவர்களிடம் இருந்து உளுந்து, துவரை மற்றும் பச்சைப்பயறு ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து 10 ஆயிரம் டன் துவரை, இம்மாதம் முதல் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆயிரத்து 900 டன் பச்சைப்பயறும், நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 58 ஆயிரத்து 425 டன் உளுந்தும் கொள் முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1,600 டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது.

பச்சைப்பயறு, உளுந்து அடுத்த மாதத்தில் (பிப்ரவரி) இருந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. ஒரு கிலோ உளுந்து ரூ.56-க்கும், பச்சைப்பயறு ரூ.69.75-க்கும், துவரை ரூ.56.75-க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

அரசின் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்