குரங்குக்கு பயந்து வீடுகளை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த பொதுமக்கள் சீர்காழி அருகே அவலம்

குரங்குக்கு பயந்து பொதுமக்கள் தங்களது வீடுகளை காலி செய்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். சீர்காழி அருகே இந்த அவலம் நடந்து உள்ளது.

Update: 2019-01-31 23:00 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஊராட்சிக்கு உட்பட்டது தென்னலக்குடி கிராமம் உள்ளது. இங்கு உள்ள காளியம்மன் கோவில் தெரு, கன்னிக்கோவில் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த தெருக்களில் கடந்த சில வாரங்களாக வெறிபிடித்து சுற்றித்திரியும் குரங்கு ஒன்று சாலையில் நடந்து செல்பவர்களையும், வீட்டில் இருப்பவர்களையும் விரட்டி, விரட்டி கடித்து வருகிறது. மேலும் அங்குள்ள நாய், கன்றுக்குட்டி, ஆட்டுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளையும் கடித்து குதறி வருகிறது.

இதுவரை குரங்கு கடித்து 30-க்கும் மேற்பட்டோர் சீர்காழி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். குரங்கு கடித்ததில் சிலர் தையல் போடும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்த குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக அந்த குரங்கை பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனாலும் அந்த குரங்கை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் குரங்கு கடிக்கு ஆளாகும் நிலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் பெரும்பாலானோர் குரங்கு கடிக்கு பயந்து குடும்பத்துடன் தங்களது வீட்டை காலி செய்து தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுடன் மாற்று இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனால் அந்த பகுதியே தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

அங்கு வசித்து வரும் ஒரு சிலரும் எந்த நேரத்தில் அந்த குரங்கு வந்து தங்களை தாக்குமோ? என்று ஒரு வித அச்சத்துடனேயே குரங்குக்கு பயந்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கடித்து துன்புறுத்தும் குரங்கை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்