நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-31 21:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள ஆவல்நாயக்கன்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் மலர்விழி. இவருக்கு பணிக்கு வரவில்லை என காரணம் காட்டி குறிப்பாணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த குறிப்பாணை பழிவாங்கும் நடவடிக்கையாக நாமக்கல் தாசில்தார் செந்தில்குமாரால் வழங்கப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக இதை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி, வட்ட தலைவர் செந்தில்கண்ணன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ராமன் மற்றும் நாமக்கல் தாலுகாவில் பணிபுரியும் சுமார் 40 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தாசில்தார் அலுவலக வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் உரிய அனுமதி பெறாமல் வெட்டப்பட்டு உள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து சப்-கலெக்டர் கிராந்தி குமார் பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டு கொண்டதால் பிற்பகல் 2 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு கொடுத்தனர். மேலும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு கோரிக்கைகளை பதிவு தபாலில் அனுப்பி இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் கூறினர். கிராம நிர்வாக அலுவலர்களின் இந்த உள்ளிருப்பு போராட்டம் நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்