மாநில அரசு திவாலாகிவிட்டது கர்நாடகத்தில் சித்தராமையா மூலம் கூட்டணி அரசு கவிழும் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி

மாநில அரசு திவாலாகிவிட்டது என்றும், கர்நாடகத்தில் கூட்டணி அரசு சித்தராமையா மூலம் கவிழும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Update: 2019-01-31 22:21 GMT
பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

திவாலாகிவிட்டது

கர்நாடக அரசின் நிதிநிலை மோசமான நிலையில் உள்ளது. குமாரசாமி, கர்நாடகத்தை அடகு வைக்கும் நிலையில் உள்ளார். கர்நாடக அரசு திவாலாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும்.

கூட்டணி அரசில் முதல்-மந்திரி முதல் அனைவரும் நாடகமாடுகிறார்கள். குமாரசாமி, சித்தராமையா இடையே மோதல் நடந்து வருகிறது. அது தற்போது பகிரங்கமாகி வருகிறது. சித்தராமையா செயல்படுத்திய திட்டங்களுக்கு குமாரசாமியால் நிதி ஒதுக்க முடியவில்லை.

கூட்டணி அரசு கவிழும்

இந்த கூட்டணி அரசை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ள தேவை இல்லை. சித்தராமையா மூலம் கூட்டணி அரசு கவிழும். முந்தைய அரசின் சில திட்டங்களை கைவிட குமாரசாமி முயற்சி செய்தார்.

இதனால் குமாரசாமிக்கும், சித்தராமையாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. கடன் பத்திரங்கள் மூலம் மாநில அரசு ரூ.1,500 கோடி திரட்டியுள்ளது. திப்பு சுல்தான், நிதி வழங்க முடியாமல் தனது குழந்தைகளை அடகு வைத்தார். அதே போன்ற நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கை

மாநில அரசின் கடன் மற்றும் வட்டி விவரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். மாநில அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு பெண்ணிடம் சித்தராமையா நடந்துகொண்ட விதத்தால், அவரது கவுரவம் குறைந்துள்ளது.

பா.ஜனதா தலைவர்களை பற்றி அவர் தரக்குறைவாக பேசினார். சித்தராமையாவின் ஆணவப்போக்கால் தான், சாமுண்டீஸ்வரி தொகுதியில் மக்கள் அவரை தோற்கடித்தனர்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

மேலும் செய்திகள்