பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு திருப்பூரில் பா.ஜனதாவினரின் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-01 23:15 GMT

திருப்பூர்,

பிரதமர் மோடி வருகிற 10–ந்தேதி திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். பிரதமர் திருப்பூர் வருகையை கண்டித்து வருகிற 10–ந் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்றுமாலை திருப்பூர் மங்கலம் ரோடு கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கி விட்டன. திருப்பூரில் பனியன் தொழில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் சிரமத்தை சந்தித்திருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி திருப்பூர் வருவதை மக்கள் விரும்பவில்லை. கடந்த 4½ ஆண்டுகளில் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து வருகிற 10–ந் தேதி திருப்பூர் வரும் மோடிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, ஆதித்தமிழர் பேரவை, தலித் விடுதலை கட்சி உள்பட 25 அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள்.

மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை கண்டித்து கருப்புக்கொடி காட்டியவர்களை பா.ஜனதாவின் எச்.ராஜா கிண்டலடித்து பேசியுள்ளார். திருப்பூர் பெரியார் மண் என்பதை நிரூபிப்போம். பிரதமர் வரும் நேரத்தில் கருப்புக்கொடி காட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த கூட்டம் நடந்த கட்டிடத்துக்கு எதிரே பா.ஜனதா கட்சியினர் திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதாவின் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது.

அப்போது எதிரே கட்டிடத்துக்குள் இருந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வெளியே வந்து எதிர்கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இருதரப்பினரும் எதிரெதிரே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இருதரப்பினரிடமும் திருப்பூர் மத்திய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கட்டிடத்துக்கு உள்ளே சென்றனர். அதன்பின்னர் பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்கு யாருக்கும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி பா.ஜனதாவினர் திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்