100 நாள் வேலை திட்ட குறைபாடுகளை சரி செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

100 நாள் வேலை திட்டத்தில் குறைபாடுகளை சரி செய்ய வலியுறுத்தி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-01 22:30 GMT
புதுக்கோட்டை,

திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்குவதில்லை என்றும், செய்த வேலைக்கு சம்பளம் வழங்குவதில்லை, வழங்கும் சம்பளத்தையும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிடக் குறைவாகவே வழங்குகிறார்கள் என்றும், வேலை செய்யாத நபர்களுக்கு வேலை செய்ததாக கணக்கு எழுதி பணத்தை கையாடல் செய்கிறார்கள் என குற்றம்சாட்டியும், தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழரசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் கவிவர்மன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ஜானகிராமன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தினந்தோறும் வேலை வழங்கவும், கூலியை குறைக்காமல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்