மார்த்தாண்டம் அருகே பெண் மீது மயக்கப்பொடி தூவி நகை-பணம் பறித்தவர் கைது

மார்த்தாண்டம் அருகே பெண் மீது மயக்கப்பொடி தூவி நகை, பணத்தை பறித்து சென்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-01 22:15 GMT
குழித்துறை,

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அருமனை அருகே தெற்றிவிளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் குட்டி, கார் டிரைவர். இவருடைய மனைவி லீலா (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டரை மார்த்தாண்டம் அருகே வெட்டுமணியில் சர்வீஸ் செய்வதற்காக கொண்டு வந்தார். சர்வீஸ் முடிந்த பின்பு வீட்டுக்கு புறப்பட தயாரான போது, ஒரு டிப்-டாப் ஆசாமி ஒருவர் அவரது அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து திடீரென மயக்கப்பொடி தூவியதாக கூறப்படுகிறது.

உடனே, லீலா சுய நினைவு இழந்து அந்த ஆசாமியின் பின்னால் சென்றதாக தெரிகிறது. அந்த நபர் அவரை சிறிது தூரம் அழைத்து சென்று, அவரது கையில் கிடந்த 1½ பவுன் தங்க வளையலை கழற்றி கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனே, லீலா தங்க வளையலை கழற்றி கொடுத்தார். அத்துடன், பையில் இருந்த ஆயிரம் ரூபாயையும் லீலா அந்த நபரிடம் கொடுத்துள்ளார். நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

சிறிது நேரம் கழித்து லீலாவுக்கு சுய நினைவு வந்து நகை, பணம் பறிபோனதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த டிப்-டாப் ஆசாமியின் உருவத்தை கைப்பற்றி அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில், நேற்று லீலா தனது உறவினர் ஒருவருடன் திருவனந்தபுரம் செல்வதற்காக குழித்துறை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் இருந்து நகை, பணத்தை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமி நிற்பதை கண்டார். உடனே, மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் குலசேகரம் பாறக்காட்டுவிளையை சேர்ந்த முரளி (49) என்பதும், லீலாவிடம் இருந்து நகை, பணத்தை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1½ பவுன் தங்க வளையலையும், பணத்தையும் மீட்டனர். தொடர்ந்து, முரளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்