கடலூர் அருகே பரபரப்பு 50 அடி பள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை

கடலூர் அருகே 50 அடி ஆழபள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தொழிலாளியை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Update: 2019-02-01 22:45 GMT
நெல்லிக்குப்பம்,

கடலூர் அருகே நடுவீரப்பட்டு அடுத்துள்ள சிலம்பி நாதன்பேட்டையை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கிருஷ்ணகுமார் (வயது 18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகி யோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பத்தன்று கிருஷ்ணகுமார், லட்சியபாரதி, அருள்மணி முத்து ஆகியோர் புத்திரன்குப்பத்தில் உள்ள செம்மண் குவாரியில் இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. இதில் கிருஷ்ணகுமாரை அங்குள்ள சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் அவர்கள் தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணகுமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் தாய் காந்திமதி நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் முதலில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த போலீசார், பின்னர் இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியை இன்ஸ்பெக்டர் (பொறு ப்பு) ஆரோக் கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய லட்சியபாரதியை(21) கைது செய்த போலீசார், அருள்மணிமுத்துவை(22) வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்