தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ரூ.1.40 கோடி கையாடல் கணக்காளரை போலீஸ் தேடுகிறது

பெங்களூரு எலச்சனஹள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ரூ.1.40 கோடியை கையாடல் செய்த கணக்காளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-01 21:32 GMT
பெங்களூரு,

பெங்களூரு எலச்சனஹள்ளி பகுதியில் கவுதம் டி.ஜெயின் என்பவருக்கு சொந்தமான தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கணக்காளராக பிரதீப் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நிறுவனத்தின் கணக்குகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை பார்த்து வந்தார். இந்த நிலையில், பிரதீப் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல், தனது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்ததாக தெரிகிறது. இவ்வாறாக அவர் கடந்த 5 ஆண்டுகளில் தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் இருந்து ரூ.1.40 கோடி கையாடல் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் கவுதம் டி.ஜெயின், குமாரசாமி லே-அவுட் போலீசில் புகார் கொடுத்தார். அதில், எனது தொழிற்சாலையில் 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். பிரதீப் கடந்த 2012-ம் ஆண்டு எனது தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். அவர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வேலையை பார்த்து வந்தார்.

ரூ.1.40 கோடி கையாடல்

அப்போதில் இருந்து அவர், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி வந்துள்ளார். இதுவரை ரூ.1.40 கோடி கையாடல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்