கோவை உக்கடத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்க எதிர்ப்பு

கோவையில் ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுப்பு செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-01 22:00 GMT
கோவை,

கோவை உக்கடம்-செல்வபுரம் சாலையில் சி.எம்.சி. காலனி, ஸ்லேட்டர் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி இடங்களை ஆக்கிர மித்து வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று இடங்களில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்காக மாநகராட்சி அதிகாரிகள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் ஏராளமானவர்கள் ஒன்று சேர்ந்து கணக்கெடுப்பு பணிக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அதிகாரிகளை கண்டித்து உக்கடம்-செல்வபுரம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அறிந்த உக்கடம் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக எங்களுடைய வீடுகளை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எங்களுக்கு உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே உள்ள புல்லுக்காடு பகுதியில் வீடுகள் கட்டித்தர வேண்டும். அதன்பின்னரே வீடுகளை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அவர்களை அதிகாரிகள் சமதானப்படுத்தினர். அதை ஏற்று பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, உக்கடம் மேம்பாலத்திற்காக இங்கு ரவுண்டானா அமைக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் 400 வீடுகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது மீதம் உள்ள வீடுகளை கணக்கெடுப்பதற்காக வந்துள்ளோம். வருகிற 4-ந் தேதி மீண்டும் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என்றனர்.

மேலும் செய்திகள்