பேரளம் அருகே பால் வியாபாரி வீட்டுக்குள் புகுந்து 16 பவுன் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பேரளம் அருகே பால் வியாபாரியின் வீட்டுக்குள் புகுந்து 16 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-02-01 23:00 GMT
நன்னிலம், 

திருவாரூர் மாவட்டம், பேரளத்தை அடுத்த கொல்லுமாங்குடி அருகே உள்ள நாடாகுடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் ஒரு அறையில் தூங்கியுள்ளார். இவருடைய மனைவி கல்பனா, மாமியார் பார்வதி ஆகியோர் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அவருடைய மகன் நவீன் வீட்டின் கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கி விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் ஏறிக்குறித்து வீட்டிற்குள் நுழைந்து கணேசன் தூங்கிய அறையை வெளிப்புறமாக தாழ்பாள் போட்டுள்ளனர். பின்னர் ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர். இரவு 2 மணியளவில் கணேசன் எழுந்து கதவை திறந்துள்ளார். அப்போது கதவு வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து செல்போன் மூலம் தனது மகன் நவீனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் எழுந்து வந்து கதவை திறந்து விட்டுள்ளார். இதை தொடர்ந்து அறையில் இருந்து வெளியே வந்த கணேசன் மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்