என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: வருவாய்த்துறை அதிகாரிகள் 8 பேர் சாட்சியம் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் வருவாய்த்துறை அதிகாரிகள் 8 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Update: 2019-02-02 22:30 GMT
நாமக்கல், 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சகோதரர் கலைச்செல்வன், கோகுல்ராஜின் தோழி சுவாதி உள்பட 45-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்து உள்ளனர்.

இதற்கிடையே நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 15 பேரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அரசுத்தரப்பு சாட்சியான தாசில்தார்கள் சந்திரமாதவன், விஜி, சாந்தி, துணை தாசில்தார்கள் தங்கம், செந்தில்குமார், கார்த்திகேயன், கோமதி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கோகுல்ராஜின் கல்லூரி தோழி சுவாதி அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக கருதப்பட்டு வந்தார். ஆனால் அவர் பிறழ் சாட்சி அளித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் நாமக்கல் முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு தனபால், கோகுல்ராஜின் தோழியான சுவாதி வருகிற 11-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்