பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

Update: 2019-02-02 22:00 GMT

பவானிசாகர்,

பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்காலுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 437 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 87.18 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 900 கனஅடி தண்ணீரும், வாய்க்காலுக்கு 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு 253 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 86.87 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 1,050 கனஅடி தண்ணீரும், வாய்க்காலுக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 1–ந் தேதி அணையின் நீர்மட்டம் 93.25 அடியாக இருந்தது. ஒரு மாதத்தில் 7 அடி குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்