விசைப்படகு பழுதை சரிசெய்ய முயன்ற மீனவர் கடலில் மூழ்கி பலி நீண்ட நேர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு

விசைப்படகு பழுதை சரிசெய்ய முயன்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மீட்கப்பட்டது.

Update: 2019-02-02 22:15 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பெனிட்டோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை ரவிக்குமார்(வயது 49), நாகராஜ், கர்ணன் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் பழுதானது. இதையடுத்து பழுதை சரிசெய்யவும், படகுக்கு கீழே உள்ள கருவியில் ஏதேனும் சிக்கியிருக்கக்கூடும் என்பதை பார்ப்பதற்காகவும் ரவிக்குமார் கடலுக்குள் இறங்கினார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் மேலே வரவில்லை.

அதனை தொடர்ந்து படகில் இருந்த மற்ற மீனவர்கள் ரவிக்குமாரை தேடிப்பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீண்டநேரம் தேடுதலுக்கு பிறகு ரவிக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்ததும் கடலோர போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், ஏட்டு நாகராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலில் மூழ்கி இறந்த ரவிக்குமாருக்கு இந்திரா என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்