பெண்களுக்காக ‘சிவப்பு டாக்சி’

வெளி இடங்களுக்கு அலுவலக பணி நிமித்தமாகவும், சுயதொழில் சார்ந்தும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பெண்கள் தனியாக பயணிப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

Update: 2019-02-03 09:18 GMT
வெளி இடங்களுக்கு அலுவலக பணி நிமித்தமாகவும், சுயதொழில் சார்ந்தும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பெண்கள் தனியாக பயணிப்பது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் பாதுகாப்பான முறையில் பயணத்தை தொடர்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இரவு நேர பயணத்தில் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அதை கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் வாகனங்கள் இயங்கத் தொடங்கிவிட்டன. பெண்களே கார் நிறுவனங்களை நடத்துபவர்களாகவும், டிரைவர்களாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பெண்களின் வசதிக்காக பிரத்யேக டாக்சிகள் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அந்த டாக்சிகளுக்கு இளம் சிவப்பு நிறத்தில் வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. அதனை பெண் டிரைவர்களே இயக்குகிறார்கள். கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகமும், பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனமும் இணைந்து டாக்சி போக்குவரத்தை தொடங்கி இருக்கின்றன.

இந்த இளம் சிவப்பு நிற டாக்சிகள் பெண்களின் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதில் பயணத்தின்போது இருப்பிடத்தை அறிவதற்கு ஏதுவாகவும், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் விதமாக சுவிட்சும் பொருத்தப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 10 டாக்சிகள் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்