சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.46¾ லட்சம் தங்கம் கடத்திய 2 பேர் கைது

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.46¾ லட்சம் தங்கம் கடத்திய 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2019-02-03 22:45 GMT
கோவை,

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா என்ற விமானம் வந்தது. இந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் வந்த 2 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த 2 பேரையும் தனியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த உஸ்மான் (வயது 26), ஷாஜகான் (24) என்பதும், தங்கத்தை பொடியாக மாற்றி, அதை மைதா மாவில் கலந்து உருண்டையாக உருட்டி ஆசனவாயில் வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 356 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.46¾ லட்சம் ஆகும். அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை மாவில் இருந்து தனியாக எடுத்து உருக்கி எடுத்த அதிகாரிகள், அதை கட்டியாக மாற்றினார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது:-

‘கைதான 2 பேரும் பணத்துக்காக ஆசைப்பட்டு தங்கத்தை கடத்தி வந்து உள்ளனர். அந்த தங்கம் வளைகுடா நாட்டில் உள்ளது ஆகும். ரூ.1 கோடிக்கும் அதிகமான பொருட்களை கடத்தி வந்தால்தான் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்போம். இதன் காரணமாக உஸ்மான், ஷாஜகான் ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்’ என்றனர்.

மேலும் செய்திகள்