விற்பனையாளரை வெளியேற்றி ரே‌ஷன்கடையை பூட்டியதால் பரபரப்பு கூட்டுறவு சங்க தலைவர் மகனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆரணி அருகே முதியோர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்காத பிரச்சினையில் ரே‌ஷன்கடை விற்பனையாளரை வெளியேற்றி கடையை கூட்டுறவு சங்க தலைவர் மகன் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-04 22:15 GMT

ஆரணி,

ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் 30–க்கும் மேற்பட்ட முதியோருக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு பொருட்கள் அங்குள்ள ரே‌ஷன்கடையில் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக உதவித்தொகை பெறும் முதியோர், ரே‌ஷன் கடை விற்பனையாளர் குமரேசனிடம் கேட்டுள்ளனர். பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படாததற்கு விற்பனையாளர்தான் காரணம் என முதியோர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த ரே‌ஷன்கடை ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து கிராமத்தை சேர்ந்த சிலர் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோரிடம் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமுர்த்தியின் மகன் சித்தன் என்பவர் நேற்று காலை ரே‌ஷன் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் ‘‘உன்னால்தான் இங்கு என் தந்தைக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது’’ என்று கூறி விற்பனையாளர் குமரேசனை வெளியேற்றிவிட்டு கடையை பூட்டிவிட்டார்.

இதை அறிந்த கிராம மக்கள் கடையை பூட்டுவதற்கு இவர் யார் எனக் கேட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி, ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்–இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விநாயகமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கணினி பொறியாளர் கார்த்தி, ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை திறக்க செய்தனர்.

சங்கம் மூலமாக விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்து கொள்ளுங்கள் என அதிகாரிகள் பேசினர். இதனால் அங்கு பரபரப்பானது.

மேலும் செய்திகள்